“எதுவும் பண்ணல.. விமர்சனம் மட்டும் தான் செய்றாரு” – மோடியை விமர்சித்த சரத் பவார்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 48 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில், அமராவதி நாடாளுமன்ற தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், பால்வந்த் வான்கடே என்பவர் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து, பாஜக சார்பில், நவ்நீத் ராணா என்ற வேட்பாளர் போட்டியிடுகிறார். இந்த நவ்நீதி ராணா 2019-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமராவதி தொகுதியில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “இதற்கு முன் இந்திய நாட்டை ஆட்சி செய்த பிரதமர்கள் அனைவரும், புதிய இந்தியாவை உருவாக்க உழைத்தனர். ஆனால், பிரதமர் மோடி மற்றவர்களை விமர்சனம் மட்டுமே செய்கிறார்.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில், தங்களது ஆட்சி மக்களுக்கு என்ன செய்தது என்பது பற்றி, அவர் பேசாமல் இருக்கிறார்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “நாம் நாட்டில் புதிய புதீன் உருவாகிறார் என்ற பயம் எங்களுக்கு உள்ளது” என்று தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தினார்.

பின்னர், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து பேசிய சரத் பவார், “இந்திய நாட்டிற்கு ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பை, வரலாற்றில் யாராலும் மறக்க முடியாது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடி அவரை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார்” என்று கூறினார்.

மேலும், இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவோம் என்று பாஜகவின் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர் என்று சரத் பவார் தெரிவித்தார். இதுமட்டுமின்றி, இந்தியா வளர்ச்சி அடைவதற்கு, ஏகாதிபத்தியத்தை மக்கள் அனுமதிக்க கூடாது என்றும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

RELATED ARTICLES

Recent News