எலெக்ஷன் கவரேஜ்.. ஆஸ்திரேலிய நிரூபருக்கு அனுமதி மறுப்பா? விளக்கம் தந்த அரசு!

ஆஸ்திரேலியா நாட்டு செய்தி ஊடகத்தின், தெற்காசிய நிரூபராக பணியாற்றி வருபவர் அவனி தியாஸ். இவர் கடந்த 20-ஆம் தேதி அன்று, இந்தியாவில் இருந்து வெளியேறியிருந்தார்.

இந்நிலையில், தியாஸ் இந்திய அரசு மீது, குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, தனது வழக்கமான விசா நீட்டிப்பை, மத்திய அரசு மறுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது விசா மறுக்கப்பட்ட விவகாரத்தை, உள்துறை அமைச்சகம் தன்னிடம் செல்போனில் கூறியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, “Youtube-ல் பதிவேற்றப்பட்ட உங்களுடைய சமீபத்திய வீடியோவில், எல்லையை மீறி கருத்து கூறியுள்ளீர்கள்” என்று உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியதாகவும், அவனி தியாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவரது இந்த அதிர்ச்சி குற்றச்சாட்டுக்கு, தற்போது அரசு வட்டாரங்களில் இருந்து, விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தன்னுடைய தொழில் சம்பந்தமான விவகாரங்களுக்காக, தியாஸ் விசா விதிகளை மீறியிருந்தார்.

இருந்தபோதிலும், நாடாளுமன்ற பொதுத் தேர்தல்கள் சம்பந்தமான செய்திகளை படம்பிடிப்பதற்காக, தியாஸின் விசா நீட்டிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது.

தியாஸின் விசா, ஏப்ரல் 20 வரை செல்லுபடியாக இருந்தது. அவர் ஏப்ரல் 18-ஆம் தேதி அன்று, விசா நீட்டிப்புக்கான பணத்தை அளித்திருந்தார். அதே நாள் அன்று, அவரது விசா, ஜூன் மாத இறுதி வரை, நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஆனால், ஏப்ரல் 20-ஆம் தேதி அன்று, இந்தியாவில் இருந்து தியாஸ் வெளியேறிவிட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.

“தியாஸ் இந்தியாவில் இருந்து புறப்படும்போது, செல்லுபடியாகும் வகையிலான விசாவை வைத்திருந்தார். அவர் விசாவும் ஏற்கப்பட்டிருந்தது. ஆனால், பொதுத் தேர்தல் செய்திகளை படம்பிடிப்பதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை என்று அவர் கூறுவது உண்மை அல்ல” என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து விளக்கம் அளித்த அரசு தரப்பில், “தேர்தல் பூத்களுக்கு வெளியே, தேர்தல் சம்பந்தமான செய்திகளை படம்பிடிப்பதற்கு, அனைத்து வகையான செய்தியாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. பூத்களுக்கு உள்ளேவும், வாக்கு எண்ணும் மையங்களிலும் மட்டும் தான், அதிகாரிகளின் கடிதம் தேவை” என்று கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News