சென்னையை அடுத்த தாம்பரத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் மேலாளர் சதீஷ், நவீன் மற்றும் பெருமாள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த பணத்தை நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக எடுத்து சென்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரனை விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த திங்கட்கிழமை தாம்பரம் காவல்நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பினர். ஆனால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்காத நயினார் நாகேந்திரன், 10 நாட்கள் அவகாசம் கோரியிருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், மே 2ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அரசியல் சூழ்ச்சியாகவே இதனை பார்ப்பதாகவும், தனக்கும், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார்.