நாட்டின் பொருாளாதார வளர்ச்சிக்கு, வேலைவாய்ப்பை உயர்த்துவது என்பது, மிகவும் முக்கியமான பணியாகும். அந்த பணி, ஒரு நாட்டில் சரியாக நடக்கவில்லை என்றால், அது பெரும் வறுமைக்கு வித்திடும்.
இவ்வாறு இருக்க, NCS என்று அழைக்கப்படும் தேசிய தொழில் சேவை என்ற அரசாங்க வேலைவாய்ப்பு வலைதளத்தில், ஆச்சரியமான தகவல் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில், 2024 ஆம் ஆண்டில், வேலை தேடுபவர்களை காட்டிலும், வேலைவாய்ப்புகள் தான் அதிகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது, NCS இணையதளத்தில், 87 லட்சத்து 27 ஆயிரத்து 900 பேர் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அதே ஆண்டில், 1 கோடியே 9 லட்சத்து 24 ஆயிரத்து 161 வேலைவாய்ப்புகள் இருந்துள்ளதாம். முந்தைய ஆண்டை காட்டிலும், 214 சதவீதம் அல்லது 3 மடங்கு அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதும், NCS வலைதள தரவுகள் மூலம், தெரியவந்துள்ளது.
இந்த வேலைவாய்ப்புகளில், நிதி மற்றும் காப்பீடு சம்பந்தமான துறைகளில், 46 லட்சத்து 68 ஆயிரத்து 845வேலைவாய்ப்புகள் உள்ளது என்பதும், இது கடந்த ஆண்டை விட, 134 சதவீதம் அதிகம் என்றும் தெரியவந்துள்ளது.
இதேபோல், ஆபரேஷன் மற்றும் சப்போர்ட் துறைகளில், 14 லட்சத்து 46 ஆயிரத்து 404 வேலைவாய்ப்புகள் உள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும், 286 சதவீதம் அதிகம்.
சிவில் மற்றும் கட்டுமானம் சம்பந்தமான துறைகளில், 11 லட்சத்து 75 ஆயிரத்து 900 வேலைவாய்ப்புகளும், இது கடந்த ஆண்டில் 9 ஆயிரத்து 396-ஆக இருந்தது என்றும், கூறப்படுகிறது.
மற்ற துறைகளை பொறுத்தவரையில், கடந்த ஆண்டை காட்டிலும், 199 சதவீதம் வளர்ச்சி அடைந்து, 10 லட்சத்து 70 ஆயிரத்து 206 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.
இவற்றை போல, உற்பத்தி, ஐடி, போக்குவரத்து, கல்வித்துறை மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த சேவைகள் தொடர்பான துறைகளில், குறிப்பிடத்தக்க அளவு வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
வேலைக்கு ஆட்கள் தேவை என்று NCS-ல் பதிவு செய்துள்ள முதலாளிகள், ஊழியர்களிடம் இருந்து என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறார்கள்?
12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு 68 லட்சத்து 77 ஆயிரத்து 532 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும், 179 சதவீதம் அதிகம்.
10-ஆம் வகுப்பு மற்றும் அதற்கும் கீழாக படித்தவர்களுக்கு, 27 லட்சத்து 4 ஆயிரத்து 280 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும், 452 சதவீதம் அதிகம்.
ஐஐடி மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு 4 லட்சத்து 2 ஆயிரத்து 192 வேலைவாய்ப்புகளும், இது கடந்த ஆண்டை காட்டிலும் 378 சதவீதம் அதிகம் என்றும், NCS தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
பட்டதாரிகளுக்கு 7 லட்சத்து 33 ஆயிரத்து 277 வேலைவாய்ப்புகளும், இது கடந்த ஆண்டை பொறுத்தவரையில், 129 சதவீதம் அதிகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
PhD மற்றும் முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு, 60 ஆயிரத்து 531 வேலைவாய்ப்புகளும், இது கடந்த ஆண்டை காட்டிலும், 123 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அனைத்து வகையான படிப்பை படித்தவர்களுக்கும், தேவையான அளவு வேலைவாய்ப்பு உள்ளது. இதில், குறைந்த திறன் மற்றும் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான தேவை தான் அதிகம் உள்ளதாக, NCS வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.