கர்நாடக மாநில எம்.பியும், முன்னாள் பிரதமர் HD தேவ கௌடாவின் பேரனுமானவர் பிரஜ்வல் ரேவன்னா. இவரது ஆபாச வீடியோ ஒன்று, இணையத்தில் வெளியாகி, சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வீடியோ குறித்து விளக்கம் அளித்த பிரஜ்வல் ரேவன்னா, காவல்துறையில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், இது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ என்றும், தன்னுடைய சமூக அந்தஸ்தை சிதைப்பதற்காக இந்த வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர் என்றும் கூறியிருந்தார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஹோலேநரசிபூர் காவல்நிலையத்தில், பெண் ஒருவர், புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அந்த பெண், “தன்னைப் போலவே இன்னொரு பெண் பாதிக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்த பிறகே, தனக்கு நடந்த சோதனைகள் பற்றி பொது வெளியில் பேசுவதற்கு முடிவு செய்தேன்” என்று கூறியுள்ளார். தான் அளித்துள்ள புகார் குறித்து பேசிய அவர், “2019-ல் இருந்து 2022-ஆம் ஆண்டு வரை, தான் சீரழிக்கப்பட்டதாக” கூறியுள்ளார்.
அந்த பெண் கொடுத்த புகாரில், “நாங்கள் 6 பெண்கள், பிரஜ்வல் ரேவன்னாவின் வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தோம். அவர் வீட்டிற்கு வந்தாலே, நாங்கள் பயத்தில் உறைந்துவிடுவோம். ஆண் வேலையாட்கள் கூட, கவனமாக இருங்கள் என்று எங்களிடம் கூறுவார்கள்.
எப்போதெல்லாம் ரேவன்னாவின் மனைவி வீட்டில் இல்லையோ, அப்போதெல்லாம் அவர் எங்களை ஸ்டோர் ரூம்-க்கு அழைப்பார். அங்கு, பழங்களை சாப்பிட தருவதுபோல் கொடுத்து, எங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வார். இதுமட்டுமின்றி, எங்களது ஆடைகளின் கொக்கிகளை அவிழ்த்து, தொந்தரவு செய்வார்” என்று கூறப்பட்டுள்ளது.
இவை அனைத்திற்கும் மேலாக, தனது மகளிடமும், அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் புகார் அளித்த பெண் கூறியுள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட காவல்துறையினர், இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணை அணியை உருவாக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.