முந்தைய காலங்களில், வயது முதிர்ந்த நபர்களுக்கு மட்டும் தான், இதயம் தொடர்பான நோய்கள் வந்துக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது இளம் வயதினர் பலரும், இந்த இதயம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு, தொடர்ச்சியாக உயிரிழந்து வருகின்றன.
இவ்வாறு உயிரிழப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறி வரும் நிலையில், தற்போது போக்குவரத்து நெரிசலில் ஏற்படும் சத்தங்களும், இதய நோய்களை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ஜெர்மனி நாட்டின் மெயின்ஸ் பகுதியில் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில், மூத்த பேராசிரியராக பணியாற்றி வந்தவர் தாமஸ் முன்சல். இவர் தனது குழுவுடன் நடத்திய ஆராய்ச்சியின் முடிவுகள், மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆராய்ச்சியின் முடிவில், போக்குவரத்து நெரிசலின் சத்தம் 10 டெசிபல் அளவில் உயரும்போது, இதயம் தொடர்பான நோய்கள் மற்றும் நீரழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு, 3.2 சதவீத அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.
இரவு நேரவு போக்குவரத்து நெரிசலின் சத்தங்கள், தூக்கம் தொடர்பான பிரச்சனைகள், மனஅழுத்தம் தொடர்பான ஹார்மோன்களின் அளவு உயருதல், ரத்த அழுத்தம் அதிகரித்தல் மற்றும் இதயம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம்.
சாலை, ரயில் மற்றும் வானில் உள்ள வாகனங்களின் மூலம் ஏற்படும் சத்தங்களை குறைப்பதற்கான சில நடவடிக்கைகளை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
அவர்கள் கூறிய சில வழிமுறைகள் பின்வருமாறு:-
1. நகர்புறங்களில், போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில், சத்தங்களை குறைக்கும் தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது, சத்தங்களை அளவை, 10 டெசிபல் அளவில் இருந்து, முடிந்த அளவு குறைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
2. சத்தங்களை குறைக்கும் வகையிலான சாலைகளை உருவாக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த வகையிலான சாலைகளை உருவாக்கினால், 3-ல் இருந்து 6 டெசிபல் அளவு வரை சத்தங்களை குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளனர்.
3. வாகன ஓட்டுநர்கள் மத்தியில், வேக வரைமுறைகளை விதிக்க வேண்டும் என்றும், சத்தங்களை எழுப்பாத டயர்களை உருவாக்குவதற்கு, ஆதரவு தர வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
4. தனிப்பட்ட முறையில் வாகனங்களை பயன்படுத்துபவர்கள், அருகில் உள்ள இடங்களுக்கு செல்லும்போது சைக்கிள்களை பயன்படுத்துங்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல், ஒரு காரில் ஒருவர் மட்டும் செல்லாமல், முடிந்த அளவு, ஒரே காரில் பலரும் செல்ல முயற்சிக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், முடிந்த வரையில், பொது போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
5. வான்வழி போக்குவரத்தின்போது ஏற்படும் சத்தங்களை குறைப்பதற்கு, மக்கள் குறைவாக உள்ள இடங்களில், விமான நிலையங்களை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், இரவு நேரங்களில் வாகனங்களை தரையிறக்குதல், புறப்படுதலுக்கு, சில கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம், வான்வழி போக்குவரத்தில் ஏற்படும் சத்தங்களை குறைக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.