பிரபல பாடகி உமா ரமணன் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி பாடகியாக இருந்த உமா ரமணன், நேற்று காலமானார். அவருக்கு வயது 72. தமிழ் சினிமாவில் பல்வேறு மறக்க முடியாத பாடல்களை பாடியுள்ள இவர், தனது கணவர் ஏ.வி.ரமணன் மற்றும் மகன் விக்னேஷ் ரமணனுடன் வசித்து வந்தார். இவரது மரணம் தொடர்பான தகவல்கள், இன்னும் வெளியாகவில்லை.

1977-ஆம் ஆண்டு, ஸ்ரீ கிருஷ்ண லீலா என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றின் மூலம், பாடகியாக அறிமுகமானவர் உமா ரமணன். அறிமுக பாடலை, தனது கணவருடன் இணைந்து பாடிய இவர், அதன்பிறகு, இசைஞானி இளையாராஜாவுடன் கூட்டணி அமைத்தார்.

நிழல்கள் படத்தில் இடம்பெற்ற பூங்கதவே தாள் திறவாய் என்ற பாடல் மூலம் கவனம் பெற்ற இவர், இளையராஜாவுடன் இணைந்து, இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

இளையராஜா மட்டுமின்றி, வித்யாசாகர், மணி சர்மா மற்றும் தேவா ஆகியோரின் திரைப்படங்களிலும், பாடல் பாடியிருக்கிறார். கடைசியாக, விஜயின் திருப்பாச்சி திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு என்ற பாடலை இவர் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளையராஜாவின் இசையில், உமா ரமணன் பாடிய சில முக்கியமான பாடல்களின், பட்டியல் பின்வருமாறு:-

1. தூரல் நின்னு போச்சு படத்தில் இருந்து, “பூபாலம் இசைக்கும்” பாடல்

2. பன்னீர் புஷ்பங்கள் படத்தில் இருந்து “ஆனந்த ராகம்” பாடல்

3. தென்றல் என்னை தொடு படத்தில் இருந்து “கண்மணி நீ வர” பாடல்

4. ஒரு கைதியின் டைரி படத்தில் இருந்து “பொன் மானே” பாடல்

5. அரங்கேற்ற வேளை படத்தில் இருந்து “ஆகாய வெண்ணிலாவே” பாடல்

6. மகாநதி படத்தில் இருந்து “ஸ்ரீ ரங்க ரங்கநாதனின்” பாடல்

    இவ்வாறு பல்வேறு ஆனந்த ராகங்களை கொடுத்த பாடகி உமா ரமணன், காலமானார் என்ற செய்தி, அவரது ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள், தங்களது இரங்கல்களை இணையத்தில் கூறி வருகின்றனர்.

    RELATED ARTICLES

    Recent News