தெலங்கானாவில் உள்ள ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் Ph.D படித்து வந்தவர் ரோஹித் வேமுலா. இவரும், இவருடன் படித்து வந்த 4 பட்டியலின மாணவர்களும் ஹாஸ்டலில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக போட்டம் நடத்தியிருந்தனர்.
இந்த போராட்டத்தின் இடையே, ரோஹித் வேமுலா, திடீரென தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கல்லூரி முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்பட்டது.
சாதி ரீதியாக, எந்தவொரு சீண்டல்களும், மாணவர்கள் மீது நடத்தப்படவில்லை என்று அரசு தரப்பில் மறுத்தபோதும், மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர்.
இதையடுத்து, அப்போதைய செகண்டராபாத் எம்.பி பண்டாரு தத்தாத்ரேயா, எம்.எல்.சி. என். ராமசந்திர ராவ், ஐதராபாத் பல்கலைக்கழத்தின் துணை வேந்தர் அப்பா ராவ், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சர் ஸ்மிருதி இரானி, அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற பாஜகவின் மாணவரணியின் தலைவர்கள் என்று பல்வேறு தரப்பினர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த சம்பவம், கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த நிலையில், தற்போது காவல்துறை தரப்பில், இறுதிகட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ரோஹித் வேமுலா தலித் சமூகத்தை சேர்ந்தவரே கிடையாது என்றும், அவரது தாய் போலி ஆவணங்களை பயன்படுத்தி, எஸ்.சி சாதி சான்றிதழை அவருக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும், கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விஷயம் சக மாணவர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்ற பயத்தினால் தான், அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
இதுமட்டுமின்றி, “தனது படிப்பை காட்டிலும், அரசியலிலேயே ரோஹித் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். முதன்முறை Ph.D படித்து வந்த இவர், இரண்டு வருடங்களுக்கு பிறகு, அதனை பாதியிலேயே நிறுத்திவிட்டார்.
பின்னர், மீண்டும் வேறொரு பிரிவில், Ph.D பட்டம் படித்து வந்தார். ஆனால், அரசியல் மீது இருந்து ஆர்வத்தின் காரணமாக, அதிலும் பெரிய முன்னேற்றங்களை அவர் அடையவில்லை” என்று காவல்துறையினர் அறிக்கையில் கூறியுள்ளனர்.
மேலும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அனைவரும், குற்றவாளிகள் அல்ல என்றும் அறிக்கையில் கூறியுள்ளனர்.
காவல்துறையின் இந்த அறிக்கை குறித்து பேசிய ரோஹித்தின் சகோதரர், “என் சகோதரர் எப்படி டார்கெட் செய்யப்பட்டு, வன்கொடுமை செய்யப்பட்டு, கடைசியில் கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரணை செய்யாமல், அவர் எந்த சாதி என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர்” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தெலங்கான உயர்நீதிமன்ற நீதிபதிகள், கீழமை நீதிமன்றத்தில், ஆட்சோபனை மனுவை தாக்குல் செய்யுங்கள் என்றும், நிவாரண நிதியை கோருங்கள் என்றும், ரோஹித்தின் சகோதரருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.