கதறி அழும் குடும்பம்: அரசு அதிகாரியிடம் மன்றாடிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர்!

புதுச்சேரியை சேர்ந்தவர் அரவிந்தன் இவர் நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த ஒன்பதரை ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவருக்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அரவிந்தன் இன்று 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் தலைமை அதிகாரி துரைசாமிக்கு தன்னுடைய கஷ்டத்தையும் மனக்குமுறல்களையும் பேசி ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் புதுச்சேரியிலிருந்து நெட்டப்பாக்கம் சென்று வர நாள் ஒன்றுக்கு பெட்ரோல் செலவு 100 ரூபாய் ஆவதாகவும் சம்பளம் இல்லாமல் என்னால் அந்த 100 ரூபாய் செலவு செய்ய முடியவில்லை எனவே உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என்று அவர் தொலைபேசியில் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் சம்பளம் இல்லாததால் தன்னை யாரும் வீட்டில் மதிக்கவில்லை என்றும், சம்பளம் இல்லாத வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இன்று முதல் நான் பணிக்கு வரவில்லை அப்படி வர வேண்டும் என்றால் எனது பெட்ரோல் செலவுக்கான காசை ஜிபே-வில் அனுப்பினால் மட்டுமே என்னால் வர முடியும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

அப்படி இல்லை என்றால் நாள் ஒன்றுக்கு நூறு ரூபாய் வீதம் 23 நாட்களுக்கு 2300 முன்பணம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். அப்படி இல்லை என்றால் நான் தொழிலாளர் நீதிமன்றத்தை அணுகி வழக்கு போடவும் தயாராக உள்ளதாகவும் அரவிந்தன் அதில் தெரிவித்துள்ளார்.

எனவே சுகாதாரத்துறையை கவனிக்கவும் முதலமைச்சர் ரங்கசாமி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

108 ஆம்புலன்சில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று ஓட்டுநர் ஒருவர் தனது மன குமரல்களை தொலைபேசி மூலம் 108 ஆம்புலன்ஸ் நிர்வாக அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ள சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

RELATED ARTICLES

Recent News