உடல் ஆரோக்கியத்திற்கு, இந்திய கழிவறைகள் தான் சிறந்ததாக இருந்தாலும், பெரும்பாலான நகரங்களில், மேற்கத்திய கழிவறைகள் தான் பயன்பாட்டில் உள்ளது. இந்த வகையான கழிவறைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாக இருந்தாலும், சில நேரங்களில், மூலம், மலச்சிக்கல் என்று பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்திவிடுகின்றன.
இது ஒரு புறம் இருந்தாலும், இந்த வகையான கழிவறைகளும், அதன் வாழ்நாளில் பல்வேறு மாற்றங்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தண்ணீரை Flush செய்யும் பட்டனில், தற்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, தற்போது உருவாக்கப்பட்டு வரும் மேற்கத்திய கழிவறைகளில், Flush செய்யும் இடத்தில் இரண்டு பட்டன்கள் இடம்பெறுகின்றன. இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல், பலரும் அதனை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, அது எதற்காக உள்ளது என்று தெரிந்துக் கொண்டு, அடுத்த முறை சரியான வழியில் நாம் பயன்படுத்தலாம்..
Flush செய்யும் இடத்தில் உள்ள இரண்டு பட்டன்களில், ஒன்று அளவில் பெரியதாகவும், மற்றொன்று சிறியதாகவும் இருக்கும். இதில், பெரிய அளவிலான பட்டனை அழுத்தினால், 6-ல் இருந்து 9 லிட்டர் வரையிலான தண்ணீர் Flush ஆகும்.
இதுவே, சிறிய அளவிலான பட்டனை அழுத்தினால், 3-ல் இருந்து 4.5 லிட்டர் அளவிலான தண்ணீர் Flush ஆகும். திடக் கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தால், பெரிய பட்டனையும், சிறுநீர் கழிவுகளை வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தால், சிறிய பட்டனையும் அழுத்த வேண்டும்.
இரண்டு பட்டனையும் சேர்த்து அழுத்தினால், Flush Tank-ல் உள்ள அனைத்து நீரும் வெளியேறி, அது காலியாகிவிடும். பட்டன் இரண்டும் சேதம் அடையக் கூடாது என்று நினைத்தால், எது தேவையோ அந்த பட்டனை மட்டும் அழுத்துங்கள்.
ஒருசிலர், எந்த பட்டன் எதற்காக பயன்படுகிறது என்று தெரியாமல், அதிகப்படியான நீரை வீணாக்கிவிடுகின்றனர். இந்த மாதிரியான இரண்டு Flush பட்டன்கள் வைத்திருப்பதன் மூலம், வருடத்திற்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீண் ஆவது தடுக்கப்படுகிறது என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுமாதிரியான இரண்டு பட்டன் அமைப்புகள் செலவு அதிகம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கலாம். ஆனால், சுற்றுசூழலுக்கும், தண்ணீர் வீண் ஆவதை தடுப்பதற்கும், இந்த இரண்டு பட்டன் முறைகள் அதிகம் பயன் உள்ளதாக இருக்கும்.
இந்த வகையிலான இரண்டு பட்டன் முறைகள், 1976-ஆம் ஆண்டு அன்று, அமெரிக்காவின் தொழில்துறை டிசைனர் விக்டர் பாபனெக் என்பவரால், உருவாக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, 1980-ஆம் ஆண்டுகளில், இதுமாதிரியான இரண்டு பட்டன்கள் முறையின் முன்னோடியாக ஆஸ்திரேலியா நாடு மாறிவிட்டது.