ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மும்பை அணியும் ஹைதராபாத் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழந்து 173 ரன்கள் எடுத்தது.
ஹைதராபாத் அணிகாக ஹெட் (48), அபிஷேக் சர்மா (11), மயங்க் அகர்வால் (5), நிதிஷ் ரெட்டி (20), கேப்டன் கம்மின்ஸ் (35) ரன்கள் எடுத்தனர்.
மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, ஐதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணியில் ரோகித் சர்மா (4), இஷான் கிஷன் (9), நமன் (0) ரன்களிலும் அவுட் ஆகினர்.
பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சூர்யகுமார் யாதவ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து சதம் அடித்தார்.
இறுதியில் மும்பை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 102 ரன்களும், திலக் வர்மா 37 ரன்களும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார், கம்மின்ஸ் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.