அமெரிக்காவில் உள்ள பென்சில்வேணியா மாகாணத்தை சேர்ந்தவர் மதபோதகர் க்ளென் ஜெர்மனி. இவர், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, வடக்கு ப்ராட்டக் பகுதியில் உள்ள தேவாலயத்தில், பிரசங்கம் செய்துகு் கொண்டிருந்தார்.
பிற்பகல் ஒரு மணியளவில், தேவாலயத்தின் உள்ளே நுழைந்த பெர்னார்டு ஜே.பொலைட் என்ற இளைஞர், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, சுட முயன்றார்.
ஆனால், அந்த துப்பாக்கி திடீரென பழுதடைந்ததால், தாக்குதலில் இருந்து ஜெர்மனி தப்பித்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள், பெர்னார்டை மடக்கி பிடித்து, அவரிடம் இருந்து துப்பாக்கியை பறித்தனர்.
முன்னதாக, மதபோதகரிடம் பேசிய பெர்னார்டு, “கடவுள் தான் என்னை இவ்வாறு செய்யச் சொன்னார். சிறைக்கு சென்று, என்னுடைய மனதை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால், தான் நான் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டினேன். தற்போது, கைது செய்யப்படுவதற்கும் தயாராக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரை கைது செய்து, அலெகெனி கவுண்டி சிறையில் அடைத்துள்ளனர்.