AIMIM கட்சியின் ஜூனியர் ஓவைசி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
அப்போது, “15 நிமிடங்களுக்கு காவல்துறையினரை, நீக்கிவிட்டால், முஸ்லீம்கள் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்கள் என்பதை, 100 கோடி இந்துக்களுக்கு காட்டுவார்கள்” என்று கூறியிருந்தார்.
இவரது பேச்சுக்கு, மகாராஷ்டிராவின் அமராவதி எம்.பியும், பாஜகவின் தற்போதைய வேட்பாளருமான நவ்நீத் ராணா பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, “தம்பி அக்பருதீன் ஓவைசி சமீபத்தில், முஸ்லீம்களின் சக்தி குறித்து பேசியிருந்தார். நான் அவரிடம் ஒரு விஷயத்தை பற்றி சொல்ல விரும்புகிறேன். உங்களுக்கு சக்தியை காட்டுவதற்கு 15 நிமிடங்கள் தேவைப்படும்.
எங்களுக்கு சக்தியை காட்ட வெறும் 15 நொடிகள் மட்டுமே தேவைப்படும். 15 நொடிகளுக்கு காவல்துறையினரை நீக்கினால், என்ன நடக்கும் என்பதை, நீங்களே புரிந்துக் கொள்ள முடியாது” என்று நவ்நீத் ராணா பேசியிருக்கிறார்.
நவ்நீத் ராணாவின் கருத்து குறித்து பேசிய AIMIM கட்சியின் மூத்த தலைவர் வாரிஸ் பதான், “இந்த முறை, அமராவதி தொகுதியை இழந்து வருவது, நவ்நீத் ராணாவுக்கு தெரியும். அதனை அவரால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால் தான், இதுமாதிரி அபத்தமாக அவர் பேசி வருகிறார். காவல்துறையினரை 15நொடிகளுக்கு நீக்கி வைத்தால், என்ன செய்வீங்க நீங்கள்?” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய அவர், “காவல்துறை என்ன செய்துக் கொண்டு இருக்கிறது? இதுவரை ஏன் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை? தேர்தல் ஆணையம் என்ன செய்துக் கொண்டு இருக்கிறது? இதுதொடர்பாக தேர்தல் ஆணையர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்” என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து தேர்தல் முடிவுகள் குறித்து பேசிய வாரிஸ் பதான், “இந்த முறை, பாஜக 200-ல் இருந்து 250 தொகுதிகள் வெற்றி பெறுவதே கடினம் என்பதை, பாஜகவே புரிந்துக் கொண்டுள்ளது” என்றும் அவர் பேசியுள்ளார்.
மேலும், “காவல்துறையினரை நீக்கிவிட்டால், நவ்நீத் ராணா என்ன செய்வார்? இஸ்லாமியர் எல்லோரையும் கொன்றுவிடுவீர்களா? இதுமாதிரி நான் சொல்லியிருந்தால்? உடனே, நான் ஜெயிலில் அடைக்கப்பட்டிருப்பேன்” என்று கூறினார்.