அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் ரிச்சர்டு ஸ்லேமேன். 62 வயதான இவர், மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில், கடந்த மார்ச் மாதம் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இறுதியில், மரபணு ரீதியாக மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை, அவருக்கு மருத்துவர்கள் பொறுத்திருந்தனர்.
இந்நிலையில், சிகிச்சை முடிந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்கள் இதுகுறித்து பேசும்போது, ரிச்சர்டின் மறைவு, தங்களுக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், அவரது குடும்பத்திற்கு இரங்கல்களையும் கூறியிருந்தனர்.
மேலும், அறுவை சிகிச்சையின் விளைவாக அவர் உயிரிழந்துவிடுவார் என்ற எந்தவொரு அறிகுறியும் தங்களிடம் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பன்றியின் சிறுநீரகம், 2 வருடங்கள் வரை நீடித்திருக்கும் என்று நம்பியதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, ஸ்லேமேனின் குடும்பத்தினர் பேசும்போது, “அறுவை சிகிச்சையின்போது நீங்கள் புரிந்த கடுமையான முயற்சியின் மூலம், ரிச்சர்டு எங்களுடன் மேலும் 7 வாரங்களுக்கு ஒன்றாக வாழ்ந்தார்.
அந்த நாட்களில் உருவான எங்களது நினைவுகள், மனதிலும், இதயத்திலும் எப்போதும் இருக்கும்” என்று கூறியிருந்தனர்.
இதற்கு முன்பு, இரண்டு ஆண்களுக்கு, பன்றியின் இதயம் மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் பொறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் இரண்டு பேரும், சில மாதங்களிலேயே உயிரிழந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்லேமேன் யார்?
அமெரிக்கா நாட்டை சேர்ந்த ரிச்சர்டு ஸ்லேமேன், கடந்த 2018-ஆம் ஆண்டு அன்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார். ஆனால், டயாலிசஸ் செய்வதற்காக, கடந்த ஆண்டு மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.
அப்போது, அவரது புதிதாக மாற்றப்பட்ட சிறுநீரகமும் செயலிழந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, பன்றியின் சிறுநீரகத்தை பொறுத்திப் பார்க்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதன்பிறகு தான், அவருக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.