நடப்பு ஐபிஎல் தொடரில் 65-வது லீக் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி ஓப்பனிங் இறங்கிய ராஜஸ்தான் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களிலும், கேப்டன் சாம்சன் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அஷ்வின் 28 ரன்கள் எடுத்து அணியை தற்காலிகமாக தாங்கி பிடித்தார். துருவ் ஜுரெல் ரன்கள் ஏதும் எடுக்காமலும், ரோமன் பாவெல் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், ரியான் பராக் 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.
145 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் 6 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோ 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரிலீ ரூசோ 22 ரன்களிலும், ஷஷாங்க் சிங் ரன்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
அதன்பின்னர் கேப்டன் சாம் கரன் 63 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
ஜிதேஷ் சர்மா 22 ரன்களும், அசுதோஷ் சர்மா 17 ரன்களும் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதன் மூலம் 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பஞ்சாப் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.