இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்-க்கும், பாடகி சைந்தவிக்கும், கடந்த 2013-ஆம் ஆண்டு அன்று திருமணம் நடைபெற்றது. 11 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக கூறினர்.
இவர்கள் இரண்டு பேரும், இந்த முடிவை அறிவித்த பிறகு, நெட்டிசன்களும், சில Youtube சேனல்களும், தங்களது எண்ணங்களுக்கு ஏற்ற பல்வேறு கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டு வந்தனர்.
இதனால், கடுப்பான ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் மீண்டும் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு, நாங்கள் இருவரும் சேர்ந்து தான் இந்த முடிவை எடுத்தோம். சமூக வலைதளங்களில், விவாகரத்து குறித்து விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது என்று கூறி, விமர்சனங்களுக்கும், வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
இருந்தும், நெட்டிசன்களின் வதந்தி அலை ஓயாமல் இருந்த நிலையில், தற்போது சைந்தவி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “குறிப்பாக, பிரைவசி வேண்டும் என்று நாங்கள் கேட்டபிறகும், தங்களுக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில், Youtube வீடியோக்களில், பல்வேறு கதைகளை சித்தரித்து வருவதை பார்க்கும்போது, வருத்தமாக உள்ளது.
வெளிப்புற அழுத்தங்களால், நாங்கள் விவாகரத்து செய்யவில்லை. எங்களது மேம்பாட்டுக்காக, இந்த முடிவை, நாங்கள் இருவரும் சேர்ந்து தான் எடுத்தோம்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
சைந்தவியின் இந்த பதிவை ரீ ட்வீட் செய்துள்ள ஜி.வி.பிரகாஷ், “இந்த கடினமான சூழ்நிலையிலும், உன்னுடைய ஆதரவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.