தமிழக கலாச்சாரம் கஞ்சா கலாச்சாரமாக மாறி வருகிறது என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று (மே.17) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழிசை சவுந்தரராஜன் காட்பாடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை திமுக அரசு காப்பாற்ற நினைக்கிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உயர் நீதிமன்றமே கஞ்சா விற்பவர்களுக்கும் காவல் துறையினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லி இருக்கிறது. திமுகவினருக்கும் காவல் துறையினருக்கும் கஞ்சா நடமாட்டத்தில் அதிகளவில் தொடர்பு உள்ளது.
கஞ்சாவை பொறுத்தவரை காவல் துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் எந்தளவில் தொடர்பு உள்ளது என்பது கண்காணிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படுவதற்கும் விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் போதை தான் காரணம். எனவே, போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
உயர் நீதிமன்றம் சொன்னதைப் போலவே கஞ்சா விற்பனை தொடர்பாக, காவல் துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் உள்ள தொடர்பை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கலாச்சாரம் கஞ்சா கலாச்சாரமாக மாறி வருகிறது. அதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், என்றார்.