கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்த அரசு மருத்துவனக்கு, கையில் இருந்த 6-வது விரலை நீக்குவதற்கு, 4 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அதற்கு பதிலாக, சிறுமியின் நாக்கில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இதேபோன்று இன்னொரு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, கேரளாவை சேர்ந்த நபர், சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.
இதையடுத்து, அரசு பொது மருத்துவமனைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். அங்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு, கடந்த சனிக்கிழமை அன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர் தனக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையை தவறாக செய்துள்ளனர் என்று காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதாவது, இன்னொரு நபருக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் தனக்கு செய்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். இவ்வாறு இவர் எழுப்பிய புகாருக்கு, அந்த மருத்துவமனையின், எலும்பியல் துறையின் தலைமை மருத்துவர் ஜாக்கப் மேத்யூ விளக்கம் அளித்துள்ளார்.
“அந்த நபர் கூறுவது அடிப்படை ஆதாரம் அற்ற குற்றச்சாட்டு. முறையான சிகிச்சை தான் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக, இதே பிரச்சனையுடன் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதே சிகிச்சை தான், இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது” என்று மருத்துவர் கூறியுள்ளார்.