ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ய சபா எம்.பி. ஸ்வாதி மலிவால், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் தாக்கப்பட்டதாக, புகார் எழுந்தது. இந்த புகாரின்பேரில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பீபவ் குமார், சமீபத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தை கையில் எடுத்த பாஜகவினர், ஆம் ஆத்மி கட்சியை தொடர்ச்சியாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, டெல்லி துணை நிலை ஆளுநரான சக்ஸீனா, இந்த சம்பவம் குறித்து இன்று பேசியிருந்தார்.
அதில், ஸ்வாதி மலிவால் நேற்று தனக்கு அழைப்பு விடுத்ததாகவும், அந்த அழைப்பில், ஆம் ஆத்மி கட்சியினர் மூலம் தனக்கு நடக்கும் அவலங்களை அவர் கூறியதாகவும், அவர் தெரிவித்திருந்தார். மேலும், இவ்வாறு செய்வது மன்னிக்கவே முடியாத செயல் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், துணை நிலை ஆளுநரின் பேச்சுக்கு ஆம் ஆத்மி சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், “ஸ்வாதி மலிவால் பாஜகவுக்காக தான் வேலை செய்கிறார் என்பது, ஆளுநரின் அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் சமயங்களில், பாஜக கட்சி தினமும் ஒரு சதித்திட்டத்தை நெய்து வருகிறது. சில நேரங்களில், மதுபான ஊழல், சில நேரங்களில் ஸ்வாதி மலிவால் விவகாரம், சில நேரங்களில் வெளிநாடு முதலீடு குறித்த போலி குற்றச்சாட்டுகள்..
தேர்தல் நேரங்களில், தினந்தோறும் பாஜக புதிய யுக்தியை பயன்படுத்தி வருகிறது. மிகவும் மோசமான நிலையில் பாஜக வீழ்ந்துக் கொண்டு இருக்கிறது. மோடியின் மூழ்கும் கப்பல் தற்போது ஸ்வாதி மலிவாலின் ஆதரவை எடுத்து கொண்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.