பீகார் மாநில பாஜகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் பவன் சிங். பாடகராக இருந்து தற்போது அரசியல்வாதியாக செயல்படும் இவர், மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் நாடாளுமன்ற தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட இருந்தார்.
ஆனால், சர்ச்சைக்குரிய வகையில் இவர் வெளியிட்ட இசை வீடியோவுக்கு, பெரும் எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் ஏற்பட்ட விளைவின் காரணமாக, அவருக்கு பதிலாக சுரிந்தர்ஜீத் சிங் அலுவாலியா என்பவரை, அந்த தொகுதியில் போட்டியிட பாஜக முடிவுசெய்துவிட்டது.
இதன்காரணமாக ஏற்பட்ட விரக்தியில், பீகார் மாநிலம் கராகட் தொகுதியில், பாஜகவின் NDA கூட்டணி வேட்பாளருக்கு எதிராக போட்டியிட இவர் முடிவு செய்துள்ளார்.
இந்த தொகுதிக்கான தேர்தல், 7-வது மற்றும் கடைசி கட்டமாக, வரும் ஜூன் 1-ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. இந்நிலையில், பீகார் பாஜக சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “NDA கூட்டணியின் வேட்பாளரை எதிர்த்து நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறீர்கள். உங்களது இந்த செயல் கட்சிக்கு எதிரானது.
இது கட்சியை களங்கப்படுத்தியுள்ளது மற்றும் கட்சியின் ஒழுக்க நெறிமுறைகளை மீறியுள்ளது. எனவே, மாநில தலைவரின் உத்தரவின்பேரில், விரோதமான செயல்களை செய்ததற்காக, நீங்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறீர்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த பீகார் துணை முதலமைச்சரும், பாஜகவின் பீகார் மாநில தலைவருமான சம்ராத் சௌத்ரி, “யாராவது கட்சிக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டால், இந்த முடிவு எடுக்கப்படுவது இயல்பு தான். கட்சி அளவில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.