கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட சில பேருக்கு, நுரையீரல் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் விளைவாக, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய நிமோனியா, வீக்கங்கள் மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த பிரச்சனையின் மூலக் காரணம் என்ன என்பது தற்போது வரை, தெளிவாக கண்டறியப்படவில்லை.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பகுதி ஆய்வாளர்கள் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இர்விங் மருத்துவ மையம் சேர்ந்து, புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வில், ஃபெரோப்டோசிஸ் என்று அழைக்கப்படும், செல் உயிரிழப்பு நடவடிக்கை தான், இதற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக நடக்கும் செல் உயிரிழப்பு நடவடிக்கையால் தான், நுரையீரல் பாதிக்கப்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் ஈடுபட்ட முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான ப்ரென்ட் ஸ்டாக்வெல், “ கொரோனா தொற்று நமது உடலை எப்படி தாக்குகிறது என்பது பற்றிய நமது புரிதலுக்கு, இந்த ஆராய்ச்சி முடிவுகள் முக்கியமான சில தகவல்களை வழங்கியுள்ளது. இந்த தகவல்கள், உயிருக்கு ஆபத்தான நோய்களை எதிர்த்து போராடுவதற்கு தேவையான நமது திறனை அதிகரிக்கும்” என்று கூறியுள்ளார்.
ஃபெரோப்டோசிஸ் என்றால் என்ன?
கடந்த 2012-ஆம் ஆண்டு அன்று, ஃபெரோப்டோசிஸ் என்ற செல் உயிரிழப்பு நடவடிக்கையை முதலில் பதிவு செய்தவர் ஸ்டாக்வெல். ஃபெரோப்டோசிஸ் என்பது, வழக்கத்திற்கு மாறான ஒரு செல் உயிரிழப்பது ஆகும். செல்களில் உள்ள வெளிப்புற கொழுப்பு லேயர்கள் உடைவது தான், இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
சாதாரணமாக உடலில் செல்கள் உயிரிழப்பது என்பது தினசரி நடக்கும் ஒரு விஷயம் தான். ஆனால், ஃபெரோப்டோசிஸ் என்பது, உடலில் பிரச்சனைகள் ஏற்படும்போதும், வயதாகும்போதும் நடக்கின்றன. இந்த செயல் உடலில் நடக்கும்போது, ஆரோக்கியமாக உள்ள செல்களும் உயிரிழக்கின்றன. இதன் விளைவாக, அல்சைமர், பர்கின்சன்ஸ் போன்ற நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுகின்றன.