ராஜ்ய சபா எம்.பி. ஸ்வாதி மலிவால் மீது, அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பீபவ் குமார் தாக்குதல் நடத்திய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த பிரச்சனையே இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கும் நிலையில், தற்போது இன்னொரு பகீர் குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது. அதாவது, பாஜகவின் தலைவர் தஜிந்தர் பால் சிங் பாக்கா, பஞ்சாப் ஆம் ஆத்மி அமைச்சர் பால்கர் சிங் மீது தனது எக்ஸ் பக்கத்தில், பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், “21 வயதான இளம்பெண் ஒருவர், பஞ்சாப் ஆம் ஆத்மி அமைச்சர் பால்கர் சிங்கிடம், வேலை வேண்டும் என்று நாடியுள்ளார். அதற்கு, அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிய அவர், திரும்பி அழைப்பதாக கூறியுள்ளார். பின்னர், வீடியோ காலில் அழைப்பு விடுத்த அவர், வேலை வேண்டும் என்றால் ஆடைகளை கழட்டு என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், அந்த வீடியோ காலிலேயே மிகவும் ஆபாசமான முறையில், அந்த பெண்ணிடம் அவர் நடந்துக் கொண்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இப்படியொரு அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், நான் எடிட் செய்த வீடியோவை மட்டும் தான் ஷேர் செய்துள்ளேன். ஒட்டுமொத்த வீடியோவில் அவர் மிகவும் ஆபாசமாக நடந்துக் கொண்டுள்ளதால், என்னால் முழு வீடியோவையும் வெளியிட முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுமட்டுமின்றி, பால்கர் சிங்கை, 24 மணி நேரத்திற்குள் வெளியேற்ற வேண்டும் என்று, முதலமைச்சர் பகவந்த் மாண்-க்கும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
“வரவிருக்கும் பஞ்சாப் தேர்தலில், மக்களின் மிகவும் கோபமான விளைவுகளை, சாக் பால்கர் சிங் சந்திக்க வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆம் ஆத்மி அமைச்சரின் வீடியோ வெளியானதையடுத்து, அவரை அம்மாநில காங்கிரஸ் கட்சியும், SAD என்ற கட்சியும், கடுமையாக விமர்சித்து வருகிறது.