பிரதமர் மோடி ராணுவ வீரர்களை கூலித் தொழிலாளர்களாக மாற்றிவிட்டார்: ராகுல் காந்தி!

பிரதமர் மோடி ராணுவ வீரர்களை கூலித் தொழிலாளர்களாக மாற்றிவிட்டார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

பிகாரில் பல்வேறு பகுதிகளில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி நேற்று (மே 27) பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் பேசியதாவது:

‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் ராணுவத்துக்கு தற்காலிக முறையில் வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னிபத் திட்டம் ரத்து செய்யப்படும். பிரதமர் மோடி ராணுவ வீரர்களை கூலித் தொழிலாளர்களாக மாற்றிவிட்டார். அக்னி வீரராக ராணுவத்தில் இணைபவர் வீர மரணமடைந்தால், அவருக்கு ராணுவத்தினருக்கு உரிய இழப்பீடும், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்தவர் என்ற கௌரவமும் கிடையாது என்பது நியாயமற்ற செயல்.

பிரதமர் மோடி தன்னை கடவுள் அனுப்பியதாகக் கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அவரிடம் அமலாக்கத் துறை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும். அப்போது, ‘எனக்கு எதுவும் தெரியாது. கடவுள்தான் என்னை அனுப்பினார்’ என்று மோடி கூறுவார் எனத் தோன்றுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் 22 பெரும் கோடீஸ்வரர்கள் மட்டுமே உருவாகியுள்ளனர். அவர்களே நாட்டின் செல்வத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ‘இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நாட்டில் லட்சக்கணக்கான கோடீஸ்வரர்கள் உருவாகுவர். தனது கோடீஸ்வர நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடி வங்கிக் கடனை பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். இதனை நாடு மறக்காது.

நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களின் பணத்தை பிடுங்கி அதனை பெரு நிறுவனங்களிடம் அளிப்பதே பாஜக அரசின் கொள்கையாக உள்ளது.

இந்த தேர்தல் நாட்டையும், அரசமைப்புச் சட்டத்தையும், ஜனநாயகத்தையும், ஏழைகளுக்கான இடஒதுக்கீடு முறையையும் காப்பாற்றுவதற்கான தேர்தல் என்றார் ராகுல்.

RELATED ARTICLES

Recent News