டெல்லி கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அதிஷி மர்லீனா சிங். இவர் சமீபத்தில் பாஜக மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார். அதில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ-க்களை பாஜக லஞ்சம் கொடுத்து, தங்களது வசம் எடுத்துக் கொள்ள நினைக்கிறது என்று கூறியிருந்தார்.
இவரது இந்த கருத்துக்கு, தற்போது பாஜக சார்பில் எதிர்விணையாற்றப்பட்டுள்ளது. அதாவது, டெல்லி பாஜகவின் ஐ.டி பிரிவு தலைவர் பிரவீன் ஷங்கர் கபூர், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று, மானநஷ்ட வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.
அந்த புகார் மனுவில், ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், தங்களது குற்றச்சாட்டு தொடர்பான ஆதாரத்தை வழங்குவதற்கு தவறிவிட்டார்கள் என்று கூறியிருந்தார்.
மேலும், “ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை பாஜக அனுகியதாகவும், தங்களது பக்கம் சேர்வதற்கு 25 கோடி ரூபாய் தர ஆஃபர் வழங்கியதாகவும்” அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.
இவரது இந்த சமூக வலைதள பதிவையும், அவர் அந்த புகார் மனுவில் மேற்கோள் காட்டியுள்ளார். தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி தலைவர்களின் இந்த குற்றச்சாட்டு, தனது கட்சியின் நற்பெயரை கெடுக்கும் வகையில் உள்ளது என்றும், அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், டெல்லி அமைச்சர் வரும் ஜூன் 29-ஆம் தேதி அன்று, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.