மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாடில் உள்ள மல்வானி பகுதியில் வசித்து வந்த தம்பதி, கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று, டி.என். நகர் காவல்நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கு புகார் அளித்த அவர்கள், “தங்களது வீட்டின் அருகில் வசித்து வரும் ஷேக் என்பவரிடம், சினிமா ஷூட்டிங்கிற்காக எங்களது குழுந்தையை கொடுத்தோம். அவர்கள், 10 ஆயிரம், 15 ஆயிரம், 20 ஆயிரம் என்று, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை எங்களுக்கு கொடுத்தார்கள். திடீரென பணம் நிறுத்தப்பட்டது. மேலும், எங்களது குழந்தையையும் திருப்பி தரப்படவில்லை” என்று கூறியிருந்தனர்.
இதனையடுத்து, 370, 34, 80, 81 ஆகிய பிரிவுகளின் கீழ், பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். பின்னர், காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதுகுறித்து பேசிய அதிகாரிகள், “வழக்கில் தொடர்புடைய ஷேக், குழந்தையின் பெற்றோர், ஓரிணச்சேர்க்கையாளர் ஜோடி சாய்பா-ரபியா அன்சாரி ஆகியோரை, நாங்கள் பிடித்து வைத்து விசாரணை நடத்தினோம்.
அந்த விசாரணையில், குழந்தை சினிமா படப்பிடிப்புக்காக கொடுக்கப்படவில்லை என்பதும், அந்த குழந்தையை 4.65 லட்சம் ரூபாய்க்கு, ஓரிணச்சேர்க்கையாளர் ஜோடிக்கு விற்பனை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது” என்று தெரிவித்தனர்.
மேலும், “நேற்று, 6 குற்றவாளிகளும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அங்கு, அவர்கள் வரும் மே 29-ஆம் தேதி வரை, நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு, உத்தரவிடப்பட்டது” என்று கூறினார்.
நடந்தது என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் மலாடில் உள்ள மல்வானி பகுதியில் வசித்து வந்த தம்பதிக்கு, மொத்தமாக 3 குழந்தைகள் உள்ளது. இதில், தங்களது கடைசி குழந்தையை, அந்த ஓரிணச்சேர்க்கையாளர் தம்பதிக்கு விற்றுள்ளனர்.
ஆனால், இந்த தகவலை அறிந்த அக்கம் பக்கத்தினர், குழந்தையை விற்ற தம்பதியை கிண்டல் செய்துள்ளனர். இதனால் அவமானம் அடைந்த அவர்கள், புதிதாக ஒரு கதையை உருவாக்கி, காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறை விசாரணையில் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.
அந்த ஓரிணச்சேர்க்கையாளர் ஜோடி யார்?
அந்த குழந்தையை காசுக்கு வாங்கிய ஓரிணச்சேர்க்கையாளர் ஜோடி, மிகவும் வசதி படைத்தவர்கள். இவர்கள் இரண்டு பேரும், மிகவும் ஆடம்பரமான வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இரண்டு பேருக்கும் குழந்தை வளர்க்க வேண்டும் என்பதில், ஆசை வந்துள்ளது. இதனால், பல்வேறு வகைகளில் குழந்தையை தத்தெடுக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அந்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இறுதியில், அந்த ஓரிணச்சேர்க்கையாளரின் வீட்டில் வேலை செய்து வந்த ஷேக் என்பவரின் மூலமாக, இந்த குழந்தையை தத்தெடுத்துள்ளனர். ஆனால், குழந்தையை விற்ற தம்பதி, காவல்துறையில் புகார் அளித்ததால், பிரச்சனையாக உருவெடுத்து, இவர்கள் சிக்கினர்.