போதைப் பொருள் விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சேலம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் சேலம் மாநகர காவல் துறை சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர்கள் லாவண்யா மாடசாமி உள்ளிட்ட உயர் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்பொழுது பேசுகையில் “சமுதாய சீர்கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். போதை தரும் மருந்துகளை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்கப்படும் பட்சத்தில் எந்த ஒரு பாகுபாடும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார்.
லாப நோக்கத்துடன் போதை தரும் மருந்துகளை மருத்துவர்கள் ஒப்புகை சீட்டு இல்லாமல் வழங்க கூடாது. போதை மருந்து விற்பனை செய்வதை கண்காணிக்க சோதனை மேற்கொள்ளப்படும். சேலம் மாநகரில் ஒரு சதவீதம் கூட போதை மருந்து இல்லாததை உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார். இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான மருந்து விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.