கெஜ்ரிவாலின் தனது ஜாமீனை நீட்டிக்கக் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அவரது இடைக்கால ஜாமீன் நிறைவடையும் நிலையில், இன்றைய வழக்கு விசாரணை முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கடந்த 2022 இறுதியில் டெல்லியில் கொண்டு வரப்பட்ட மதுபான கொள்கை அங்கு ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மிக்கு அடுத்தடுத்து சிக்கலைக் கொடுத்து வருகிறது. அந்த மதுபான கொள்கை அப்போதே வாபஸ் பெறப்பட்டுவிட்ட போதிலும் பல ஆம் ஆத்மி தலைவர்கள் சிறையில் இருந்து வருகிறார்கள்.
ஏற்கனவே டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஓராண்டிற்கு மேலாக இந்த வழக்கில் சிறையில் இருக்கிறார். இதற்கிடையே டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சூழலில் தான் அவருக்குக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த இடைக்கால ஜாமீன் நிறைவடையும் நிலையில், அவர் சரணடைய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே இடைக்கால ஜாமீனை மேலும் ஒரு வாரம் நீட்டிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்திருந்தார். அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று அவரது தரப்பு கோரிக்கை விடுத்த போதிலும் அதை அவசரவழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இதன் காரணமாக அவர் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.