பால் மற்றும் அது சார்ந்த பொருட்களை தயாரித்து வரும் நிறுவனம் அமுல். இந்த நிறுவனத்தின் பொருட்களை சந்தைப்படுத்துவது தான், குஜராத் கூட்டுறவுத்துறை பால் மார்கெட்டிங் கூட்டமைப்பு ஆகும்.
இந்த கூட்டமைப்பின் ( GCMMF ) நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா, தற்போது பேசியுள்ளார்.
அதில், நிறுவனத்தை நடத்துவதற்கான செலவு மற்றும் பால் தயாரிப்புக்கான செலவு அதிகரித்துள்ளதால், அமுல் பாலின் அனைத்து வகையின் விலையும், லிட்டருக்கு ரூபாய் 2 உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், இந்த நடைமுறை இன்றில் இருந்து தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விலையேற்றம் குறித்து தொடர்ச்சியாக பேசிய ஜெயன் மேத்தா, “லிட்டருக்கு 2 ரூபாய் விலை ஏறியிருப்பது, பாலின் MRP-யில் 3-ல் இருந்து 4 சதவீதம் அளவிற்கு மட்டும் தான் இருக்கும். இது சராசரி உணவுப் பொருட்களின் விலை வீக்கத்தை விட மிகவும் குறைவு தான்” என்று கூறினார்.
மேலும், “கடந்த 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி-ல் இருந்து தற்போது வரை, முக்கியமான மார்கெட்டுகளில், பால் பாக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படவில்லை” என்றும் அவர் கூறியிருந்தார்.
மேலும், வாடிக்கையாளர்கள் மூலம் கிடைக்கும் பணத்தில், ஒரு ரூபாயில் 80 பைசாவை, பால் உற்பத்தி செய்பவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கொள்கையை அமுல் நிறுவனம் கொண்டுள்ளது என்றும், பால் விலை உயர்த்தப்பட்டிருப்பது, பால் உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்த உதவும் என்றும், அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம், அவர்கள் பால் உற்பத்தியை அதிகப்படியான அளவில் உயர்த்துவார்கள் என்றும் ஜெயன் மேத்தா தெரிவித்துள்ளார்.
ஏற்றப்பட்ட பாலின் விலை:-
தற்போது விலை ஏற்றப்பட்டுள்ளதால், 500 மி.லி அமுல் எருமை பால் 36 ரூபாய்க்கும், 500 மி.லி. அமுல் கோல்டு பால் 33 ரூபாய்க்கும், 500 மி.லி அமுல் சக்தி பால் 30 ரூபாய்க்கும், இனிமேல் விற்பனை செய்யப்படும்.