பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்த, இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியும், இந்த முறை நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது.
இந்த தேர்தல், 7 கட்டங்களாக நடந்த நிலையில், நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பாஜகவின் என்.டி.ஏ கூட்டணி, 292 இடங்களை கைப்பற்றியிருந்தது. ஆனால், எதிர்கட்சிகளின் இண்டியா கூட்டணி வெறும் 234 இடங்களை மட்டும் தான் வென்றிருந்தது.
இதற்கிடையே, எந்த கூட்டணியிலும் சேராத கட்சிகள், 17 இடங்களில் வென்றிருந்தது. எனவே, பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களுக்கு மேல் பாஜகவின் கூட்டணி வென்றிருப்பதால், மீண்டும் பாஜக ஆட்சியமைக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவலை அறிந்த கட்சி தலைவர்கள், தொண்டர்கள், வெளிநாட்டை சேர்ந்த தலைவர்கள், நரேந்திர மோடிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
அந்த வகையில், இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, நரேந்திர மோடிக்கு வாழ்த்துக் கூறி, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
அந்த பதிவில், “புதிய தேர்தல் வெற்றிக்கும், உங்களது சிறந்த பணிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இத்தாலி-இந்தியாவை இணைக்கவும், நட்பை வலுப்படுத்தவும், நமது தேசங்கள் மற்றும் மக்களின் நல்வாழ்வுக்காகவும், நாம் இருவரும் இணைந்து பணியாற்றுவோம் என்பது உறுதி” என்று கூறியுள்ளார்.