இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் கடந்த ஜூன் 4-ஆம் தேதி அன்று வெளியானது. இதில், 292 இடங்களை கைப்பற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி, ஆட்சியை கைப்பற்றியிருந்தது.
இதையடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோரி, குடியரசு தலைவரிடம் முறையிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில், நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும், கூட்டணி கட்சியின் தலைவர்களும், பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் உள்ள போலியாரு கிராமத்தில், பாஜகவின் இந்த வெற்றியை, கட்சி தொண்டர்கள் 2 பேர் கொண்டாடியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த 20-ல் இருந்து 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பாஜக தொண்டர்களை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில், இரண்டு பேரில், ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவிலும், இன்னொருவர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுதொடர்பான புகாரில், ஐ.பி.சி. பிரிவு 341, 143, 147, 148, 504, 506, 323, 324, 307, 149 ஆகிய பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தீவிரமாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.