மணிப்பூர் பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக தீர்க்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோகன் பாகவத், “கடந்த ஓராண்டாக மணிப்பூர் மக்கள் அமைதிக்காக காத்திருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக அந்த மாநிலம் அமைதியாகவே இருந்து வந்தது, ஆனால் திடீரென மீண்டும் துப்பாக்கி கலாச்சாரம் அங்கே தலைதூக்கியுள்ளது.
மணிப்பூர் பிரச்சினையை முன்னுரிமை அடிப்படையில் உடனடியாக தீர்க்க வேண்டும். அங்கே வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பொருளாதாரம், பாதுகாப்பு, விளையாட்டு, கலாச்சாரம், தொழில்நுட்பம் என பல துறைகளில் நாம் முன்னேறி இருக்கிறோம். ஆனால் அதன் மூலம் எல்லா சவால்களையும் தாண்டிவிட்டோம் என்று அர்த்தமல்ல.
தேர்தல் என்பது ஒருமித்த கருத்தை உருவாக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் ஒருவரையொருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வது, தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, பொய்யான செய்திகளை பரப்புவது ஆகியவை ஆரோக்கியமானதல்ல.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஒரு கட்சி ஒரு பக்கம் குறித்து பேசினால், எதிர்கட்சியினர் மற்றோரு பக்கம் குறித்து பேசவேண்டும். இதன் மூலமே நாம் சரியான முடிவை எட்ட முடியும். தேர்தல் பரபரப்பில் இருந்து விடுபட்டு நாடு எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டும்” என்று மோகன் பாகவத் பேசினார்.