இந்தியாவை சேர்ந்த கண்டுலா நாகராஜூ என்ற 39 வயது நபர், சிங்கப்பூரில் உள்ள NCS என்ற ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நவம்பர் 2021-ஆம் மாதத்தின்போது வேலை செய்ய தொடங்கிய இவர், சரியாக வேலை செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த நிறுவனம், 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இதன்காரணமாக கோபம் அடைந்த நாகராஜூ, மீண்டும் இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
அங்கு, லேப் டாப் ஒன்றை வாங்கிய நாகராஜூ, என்.சி.எஸ் நிறுவனத்தின் சர்வர்களை ஹேக் செய்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 6 முதல் 17-ஆம் தேதி வரை, 6 முறை அவர் ஹேக் செய்திருக்கிறார்.
அதே வருடத்தின் பிப்ரவரி மாதத்தின்போது, நாகராஜூ-க்கு மீண்டும் சிங்கப்பூரிலேயே வேலை கிடைத்ததால், அவர் அங்கு சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகு, என்.சி.எஸ் நிறுவனத்தின் 180 சர்வர்களையும், மார்ச் 18 மற்றும் 19-ஆம் தேதி அன்று டெலிட் செய்திருக்கிறார்.
அடுத்த நாள், சர்வர் ஹேக் செய்யப்பட்டதை அறிந்த அந்நிறுவனம், காவல்துறையில் புகார் அளித்தது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், நாகராஜூ தான் சர்வர்களை டெலிட் செய்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்த நிலையில், அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, நாகராஜூ-க்கு இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நாகராஜூ-வின் இந்த செயலால், என்.சி.எஸ் நிறுவனத்துக்கு 6 லட்சத்து 78 ஆயிரம் அமெரிக்க டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.