காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா மாநில தலைவராக பணியாற்றி வருபவர் நானா படோல். இவர், நேற்று அகோலா மாவட்டத்திற்கு சுற்றுலாவிற்கு சென்றுள்ளார். அப்போது, அங்குள்ள கோவிலுக்கு அவர் சென்றபோது, காலில் சேறு நிறைந்து காணப்பட்டுள்ளது.
அந்த சேற்றை, கட்சியின் பணியாளர் ஒருவர் சுத்தம் செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், அவரை விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், “நேற்று நடந்த விஷயத்தை நான் மறைக்க மாட்டேன். கட்சியின் பணியாளர் எனது பாதத்தின் மீது தண்ணீர் தான் ஊற்றிக் கொண்டு இருந்தார். அந்த இடத்தில், தண்ணீர் குழாய் இல்லை. மற்றபடி, நான் குழாயில் இருந்துதான் தண்ணீரை பயன்படுத்தியிருப்பேன்” என்று கூறினார்.
இதுகுறித்து பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. “இதில் துரரதிஷ்ட வசமான விஷயம் என்னவென்றால், அவர்களது வாழ்க்கைக்காக உழைத்து வரும் பணியாளர்களை, காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாக அவமதித்து வருகிறது.
கட்சியின் பணியாளரை வைத்து தனது பாதத்தை காங்கிரஸ் தலைவர் நானா படோல் கழுவ வைத்த விஷயம், மிகவும் வெட்கக் கேடான ஒன்று. இதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரமா?” என்று கூறப்பட்டுள்ளது.