‘டி-20’ உலக கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. கேப்டன் ரோகித் அரைசதம் விளாச, ‘சூப்பர்-8’ போட்டியில் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீசின் செயின்ட் லுாசியாவில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் (‘பிரிவு-1’) இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய இந்திய கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பையில் அதிவேக அரை சதம் அடித்தாலும், அதிவேக சதம் அடிப்பதை தவறவிட்டார்.
அவர் 41 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்து 224 ஸ்டிரைக் ரேட்டில் துடுப்பாடினார். ஒரு சமயம் அவரது ஸ்ட்ரைக் ரேட் 300ஐ எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் சூர்யகுமார் (31), ஷிவம் துபே (28), ஹர்திக் பாண்டியா (27) ஆகியோர் அணியின் எண்ணிக்கையை 205க்கு கொண்டு சென்றனர்.
இப்போட்டியின் மூலம், இந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதன்முறையாக 200 ரன்கள் மேல் எடுத்துள்ளது.
ஆஸ்திரேலியா தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 4 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஹேசில்வுட் தவிர, ஒவ்வொரு பந்து வீச்சாளரும் தனது ஓவரில் 10 ரன்களுக்கு மேல் கொடுத்தனர்.
ஆஸ்திரேலிய அணி 13 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 128 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அதன்பின் கடைசி 7 ஓவர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரமாக மீண்டு வந்து ஆஸ்திரேலிய அணியை 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தில் 181 ரன்களில் முடித்து வைத்தனர்.
டிம் டேவிட், மேத்யூ வேட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோரின் விக்கெட்டுகளை அர்ஷ்தீப் சிங் கைப்பற்ற, குல்தீப் யாதவ் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரை பெவிலியன் அனுப்பினார்.
பும்ரா டிராவிஸ் ஹெட் (76) விக்கெட்டை வீழ்த்தி போட்டியை இந்தியாவுக்கு சாதகமாக மாற்றினார். ஹெட் 43 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.