கடந்த ஜூன் 29-ஆம் தேதி அன்று, இந்தியாவுக்கும், தென் ஆப்ரிக்கா அணிக்கும் இடையே, T20 உலகக் கோப்பையின் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இதையடுத்து, அணியின் வீரர்கள், தங்களது வெற்றியை கொண்டாட ஆரம்பித்தனர். அப்போது, பலரும் அதிர்ச்சி அடையும் வகையில், T20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக, ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் அறிவித்தனர்.
இதனைக் கேட்ட அவர்களது ரசிகர்கள், தங்களது வருத்தங்களை இணையத்தில் வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜே ஷா, பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “சேம்பியன்ஸ் டிராபி 2025 மற்றும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி போட்டி ஆகியவற்றில், சீனியர் வீரர்கள் இருப்பார்கள்” என்று உறுதியளித்துள்ளார்.
மேலும், தற்போது நடந்த உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணி சார்பாக விளையாடிய வீரர்களில், ஜிம்பாப்வே டூர் போட்டிக்கு, 3 பேர் மட்டுமே செல்ல உள்ளனர் என்றும், அந்த 3 பேர், யாசஷ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் ஆகியோர் தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய அணி, அனைத்து டைட்டில்களையும் வெல்ல வேண்டும். நம்மிடம் மிகப்பெரிய வலிமை உள்ளது” என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு ஜே ஷா பேசியிருப்பதை பார்க்கும்போது, சேம்பியன்ஸ் டிராபியில், விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் முக்கிய இடம் பிடிப்பார்கள் என்பது தெரியவந்துள்ளது.