ஐசிசி-யின் இருபது ஓவர் உலகக் கோப்பையில், இந்திய அணி சாம்பியன்ஸ் பட்டம் வென்றது. இது, இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் முன்னிலையில், வெற்றி பேரணி என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், உலகக் கோப்பைக்கான போட்டியில் இடம்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்துக் கொண்டனர்.
இதனை காண்பதற்கு, அங்கு பல்லாயிரம் மக்கள் ஒன்று திரண்டிருந்தனர். இந்த விஷயத்தை ஒருசிலர் பெருமையாக கருதினாலும், வேறு சிலர், தங்களது விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.
அந்த வகையில், Newton என்ற எக்ஸ் தளப் பக்கத்தில், பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
அதில், மனிப்பூர் கலவரம், மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம், NEET தொடர்பான பிரச்சனைகளுக்கு நீதியை பெற்று தருவதற்கு, இந்த கூட்டத்தில் இருந்து வெறும் 25 சதவீத மக்கள் வந்திருந்தால் கூட, அவர்களுக்கு நீதி கிடைத்திருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த பதிவை, ரீ ட்வீட் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மிகவும் கடுமையான உண்மை என்று கூறியுள்ளார். மேலும், Justasking என்ற ஹேஷ்டேக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.