அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த பிறகு திமுக – பாஜக இடையே வார்த்தை போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் “அண்ணாமலை வந்த பிறகுதான் பாஜகவுக்கு பலம் வந்ததுபோல் மாயையை உருவாக்குகிறார். வேண்டுமென்றே அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு பேசி வருகிறார் அண்ணாமலை.
பாஜக தலைவராக தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து என்ன திட்டங்களை அண்ணாமலை பெற்று தந்திருக்கிறார்?. தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத பாஜக தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார்” என காட்டமாக பேசினார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விக்கிரவாண்டியில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசினார். “அதிமுக கோட்டை எனக்கூறும் கோவையில் 3 சட்டமன்ற தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. எடப்பாடி பழனிசாமியை, பிரதமர் மோடி பக்கத்தில் அமர வைத்தார்; நம்பிக்கை வைத்த பிரதமர் மோடியின் முதுகிலேயே குத்தியவர்தான் எடப்பாடி.
நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கே பொருந்தும். நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். அதிமுக சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினால் கூட்டமே வருவதில்லை. முன்பு இருந்ததுபோல் இல்லை; அதிமுக சிறிது சிறிதாக கரையத் தொடங்கிவிட்டது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 2019-ம் ஆண்டு முதல் தொடர் தோல்வியை சந்திக்கிறது. அதிமுகவுக்கு அடிமையாக இருப்பதற்காக நாங்கள் அரசியல் செய்யவில்லை. பாஜகவுக்கும், எனக்கும் பாடம் எடுக்கும் அருகதை ஈபிஎஸ்க்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.