கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள அமைழஞ்சான் என்ற கால்வாயில், வழக்கமான சுத்தம் செய்யும் பணிக்காக, நகராட்சி ஊழியர் சென்றுள்ளார். ஆனால், அந்த சமயத்தில் கனமழை பெய்து வந்ததால், அப்போது அவர் கால்வாயின் உள்ளே விழுந்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் வெளியே வர முடியாததால், அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நகராட்சி ஊழியரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த பணியில், கேரள தீயணைப்புத்துறை, ரோபோக்களை தயாரிக்கும் நிறுவனம், ஸ்கூபா டைவர்ஸ் ஆகியோர் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மீட்பு பணி குறித்து பேசிய கேரள தீயணைப்புத்துறையின் பொது இயக்குநர் கே.பத்மகுமார், “அந்த ஒட்டுமொத்த பகுதியில், ரயில்வே லைனின் கீழ் உள்ளது. அந்த கால்வாயின் உள்ளே, பல பழைய கால்வாய்களின் இணைப்பு உள்ளது.
எங்களுடைய ஸ்கூபா டைவர்ஸ், 60 மீட்டர் ஆழம் வரை சென்றுள்ளனர். ஆனால், இன்னும் ஆழமாக செல்வது, டைவர்களின் உயிரை ஆபத்தில் தள்ளிவிடும்” என்று கூறினார்.
மேலும், அந்த கால்வாயில் குப்பைகள் நிரம்பி இருப்பதால், ஒவ்வொரு அடி உள்ளே செல்வதும் சவாலாக உள்ளது என்றும், நகராட்சி ஊழியரின் உடல், கால்வாயின் ஆழத்தில் புதைந்திருக்கலாம் என நாங்கள் யூகிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.