நாடு முழுவதும் அரசு பள்ளிகளின் தரம் என்பது சற்று கேள்விக் குறியாக தான் உள்ளது. ஒருசில மாநிலங்களில், அதன் தரம் மிகவும் குறைந்த நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோவா முதலமைச்சர் பிரமோத் சவாந்த் , அம்மாநில சட்டமன்றத்தில், நேற்று புதிய தரவுகளை வெளியிட்டிருந்தார்.
அந்த தரவுகளின் அடிப்படையில், 2024-25 ஆம் கல்வி ஆண்டில், ஒரு மாணவர்கள் கூட பள்ளியில் சேருவதற்கு பதிவு செய்யாததால், 42 அரசு தொடக்கப் பள்ளிகள், மூடும் தருவாயில் உள்ளன என்று தெரியவந்துள்ளது.
மாநில அரசின் மூலம் நடத்தப்படும் 57 சதவீத பள்ளிகளில், வெறும் 5 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் மட்டும் தான் சேர்ந்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், 694 அரசு தொடக்க பள்ளிகளில், 4 ஆயிரத்து 44 மாணவர்கள் மட்டும் சேர்ந்துள்ளனர் என்றும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்றும், அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
பள்ளி கட்டணம் அதிகமாக இருந்தபோதிலும், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில், 3 ஆயிரத்து 622 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இந்த தரவுகளை, சட்டமன்றத்தில் தாக்கல் செய்தபோது பேசிய முதலமைச்சர் பிரமோத் சவாந்த், “ மாநில அரசால் நடத்தப்படும் பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறைவதை தடுப்பதற்கு, மிகவும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை பணி அமர்த்த, அரசு தொடர்ச்சியாக முயற்சி செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.