இந்தியாவின் முக்கியமான பிசினஸ் மேன்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சண்ட் என்ற பெண்ணுக்கும், திருமண விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில், உலகம் முழுவதும் உள்ள பிரபலங்களும், முக்கிய அரசியல்வாதிகள், தொழில்அதிபர்களும் கலந்துக் கொண்டு, விழாவை சிறப்பித்துள்ளனர். இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதரா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த பதிவில், “அம்பானி வீட்டு திருமணத்தில் வெடிகுண்டு வெடித்தால், பாதி உலகம் தலைகீழாக மாறிவிடும் என்ற ஒரு அசிங்கமான யோசனை என்னுடைய மனதில் தோன்றியது. ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் ஒரு Pin Code-ல் உள்ளது” என்று கூறியிருந்தார்.
இவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இது மறைமுக வெடிகுண்டு எச்சரிக்கையாக இருக்கலாம் என்றும், அம்பானி வீட்டு திருமண விழாவின் உள்ளேவும், அதனை சுற்றியுள்ள பகுதியிலும், பாதுகாப்பை பலப்படுத்த வேண்டுமு் என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், இந்த பதிவு, மும்பை மாநகர காவல்துறையினர் கவனத்திற்கு சென்றதையடுத்து, அவர்கள் அந்த பதிவை வெளியிட்ட நபரை தற்போது கைது செய்துள்ளனர்.