பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மறைந்த கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு மற்றும் அவரது கூட்டாளிகளான சந்தோஷ், திருமலை, மணிவண்ணன்,குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்றவூர் ராமு என்ற வினோத் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு கழக பகுதி துணை செயலாளரும், வழக்கறிஞருமான மலர்கொடி உள்ளிட்ட மேலும் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து மலர்கொடி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.கட்சிக்கு களங்கம், அவப்பெயரை உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தால் மலர்க்கொடி கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் ) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.