உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு கட்சியிலும், ஆட்சியிலும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. இந்த தகவலால் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இந்தியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி 37 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 வெற்றி பெற்றன. இதன் காரணமாக பாஜகவுக்கு இந்த முறை பெரும்பான்மை கிடைக்கவில்லை. 272 இடங்கள் தேவை என்ற நிலையில், வெறும் 240 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடியே குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதேபோல, பாஜக பிரச்சாரத்தில் மையப்புள்ளியாக விளங்கிய ராமர் கோயில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதிலேயே பாஜக தோல்வியை தழுவியது.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகள் தான் இதற்கு காரணம் என்று அக்கட்சியினரே குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், உத்தர பிரதேச முதல்வர் மாற்றப்படலாம் என தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளன. இல்லையென்றால் அம்மாநில பாஜக தலைவர் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது.