சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, 3-வது முறை வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, பாஜகவின் நிதியமைச்சர் இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அந்த பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, விவசாய உற்பத்தி, திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு, முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
ஏஞ்சல் வரி ரத்து:-
அனைத்துவிதமான முதலீட்டாளர்களுக்கும், ஏஞ்சல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், எளிய புதிய வரி அதற்கு பதிலாக கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சுங்க வரி குறைப்பு:-
தங்கம், வெள்ளி பொருட்கள் மீதான சுங்க வரி, 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பிளாட்டினம் மீதான வரி, 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
விலை மலிவாகும் செல்போன்கள்:-
செல்போன்கள் மற்றும் அதன் சார்ஜர்கள் மீது விதிக்கப்படும் அடிப்படை சுங்க வரி, 15 சதவீதமாக குறைந்துள்ளது. இதன்காரணமாக, செல்போன்களின் விலை, அதிக அளவில் குறையும்.
ஜி.எஸ்.டி மறுசீரமைப்பு:-
சரக்கு மற்றும் சேவை வரியான GST-யை மறுசீரமைப்பு செய்வதற்கு, அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை:-
2024-ஆம் நிதியாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி-யில் 5.6 சதவீதம் வரையில் உள்ள நிதி பற்றாக்குறை, 2025-ஆம் நிதியாண்டில் 4.9 சதவீதமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதிப்பு:-
இந்தியா முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிவாரண உதவி வழங்க, ரூபாய் 11 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி:-
விண்வெளி ஆராய்ச்சி துறையில், இந்தியா வளர்ந்து வருகிறது. அதனை ஊக்குவிக்கும் வகையில, அந்த துறைக்கு, இந்த ஆண்டு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத்தொகை திட்டம்:-
புதிய வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத்தொகை திட்டங்கள், பட்ஜெட்டின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு:-
நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மூலதன செலவீனங்களுக்கு, 11.11 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் ஜி.டி.பி-யில் 3.4 சதவீதம் ஆகும்.
வீட்டு வசதி வளர்ச்சி துறை:-
இந்த மத்திய பட்ஜெட்டில், நகர்புறங்களில் உள்ள ஒரு கோடி ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் சமாளிக்கும், வீட்டு வசதி சம்பந்தமான பிரச்சனைகள் பேசப்பட்டுள்ளது. இதற்காக, 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி மாற்றங்கள்:-
புதிய வருமான வரி அடுக்குகள் என்னென்ன என்று, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 0-ல் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை, வருட வருமானம் வாங்குபவர்கள் வரி செலுத்த வேண்டாம். 3 லட்சத்து 1 ரூபாயில் இருந்து, 7 லட்சம் ரூபாய் வரை, வருட வருமானம் வாங்குபவர்கள் 5 சதவீதம் வரி கட்ட வேண்டும். 7 லட்சத்து 1 ரூபாயில் இருந்து 10 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் 10 சதவீத வரி செலுத்த வேண்டும். 10 லட்சத்து ஒரு ரூபாயில் இருந்து 12 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் 15 சதவீத வரி செலுத்த வேண்டும். 15 லட்சம் ரூபாய்-க்கு மேல் சம்பாதிப்பவர்கள், 30 சதவீத வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றவை:-
இவை மட்டுமின்றி, Standard Deduction 50-ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்கள், அதிகம் பலன் அடைவார்கள். மேலும், நீண்ட-கால மூலதன ஆதாய வரி, 10 சதவீததத்தில் இருந்து 12.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.