மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அடுத்த வருடம் பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், “மத்திய பிரதேசத்தில் முதலீடு செய்யுங்கள்” என்ற உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இதன் முன் நிகழ்வாக, தற்போது கலந்துரையாடல் கூட்டம் ஒன்று, தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் இன்று தொடக்கி வைத்தார்.
இதையடுத்து, இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “பல்வேறு துறைகளில் உள்ள தொழில்முனைவோர்களுடன் பேசும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. மத்திய பிரதேசத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்று, முதலீட்டாளர்கள் விரும்புகிறார்கள்.
எனவே, இங்கு ஒரு அலுவலகத்தை நாங்கள் திறக்க உள்ளோம். இது மத்திய பிரதேச அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே ஒரு பாலமாக அமையும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “வரும் நாட்களில், மத்திய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்க உள்ள மண்டல தொழில்துறை மாநாடுகளில் கலந்துக் கொள்ள நான் அழைப்பு விடுக்கிறேன். தொழில்முனைவோர்கள் மத்திய பிரதேசத்திற்கு வந்து, தங்களது தொழிலை பெருக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.
“ஜவுளி மற்றும் ஆடை தொடர்பான தொழில்களுக்கு, அதிக நிதி நலன் கொண்ட சலுகைகளை, மத்திய பிரதேச அரசு வழங்கி வருகிறது. மேலும், மத்திய பிரதேசத்தில் உள்ள ஈர்க்கும் வகையிலான நிதி நலன் சார்ந்த சலுகைகள், மலிவான விலையில் உள்ள நிலங்கள், அதிகப்படியான பருத்தி வளம் ஆகியவற்றை, நாட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளி நிறுவனங்கள் ஈர்க்கின்றன” என்று கூறினார்.