கடந்த மாதத்தில் தனியார் செல்போன் நிறுவனங்கள், ரீசார்ஜ் கட்டணங்களை 12 முதல் 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது. இதனால், அச்சேவையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம், 4ஜி சேவைக்கான ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. குறிப்பாக ₹153க்கு 28 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபியும், ₹365க்கு 60 நாட்களுக்கு தினமும் 2 ஜிபியும், ₹429க்கு 81 நாட்களுக்கு தினமும் 1 ஜிபியும், ₹485க்கு 90 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபியும், ₹666க்கு 134 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபியும், ₹997க்கு 180 நாட்களுக்கு தினமும் 3 ஜிபியும் என குறைந்த விலையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடப்பு மாதத்தில், 30 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைக்கு மாறி வந்துள்ளனர். தமிழ்நாட்டில் கடந்த 28 நாளில் 2 லட்சம் பேர் மாறியிருக்கிறார்கள். தற்போது, சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு என முக்கிய நகரங்களில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு உள்ளது.