கடந்த சில வருடங்களாகவே இந்தியாவில் ரயில் விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஹாவுரா-மும்பை விரைவு ரயில், ஜார்கண்ட் மாநிலம் செரைகேலா-கர்சவான் மாவட்டத்திற்கு வந்தபோது, தடம் புரண்டது. இந்த விபத்தில், 2 பேர் பலியானது மட்டுமின்றி, 20 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு, எதிர்கட்சியினர் தொடர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
அகிலேஷ் யாதவ், “ரயில் விபத்துகள் ஏற்படுத்துவதில் சாதனை புரிவதற்கு, இந்த அரசாங்கம் ஆசைப்படுகிறது. மக்கள் தங்களது வாழ்க்கை இழந்து வருகின்றனர். இதனை தடுப்பதற்கு அரசாங்கம் எதையாவது செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான், இதுமாதிரியான விபத்துகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
முன்னாள் மத்திய ரயில்வேதுறை அமைச்சரும், தற்போதைய மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜியும், தொடர் ரயில் விபத்துகளுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பதிவிட்ட அவர், “நான் சீரியஸ்-ஆ கேக்குறேன், இதெல்லாம் ஆட்சியா? கிட்டதட்ட எல்லா வாரமும், இதுமாதிரியான கெட்ட கனவுகள். எவ்வளவு நாட்களுக்கு நாங்கள் இதனை சகித்துக்கொள்வது? இந்திய அரசாங்கத்தின் இந்த அலட்சியத்திற்கு, முடிவு உள்ளதா?” என்று தெரிவித்துள்ளார்.
இவர்களை போல், ஷிவ சேனா கட்சியின் எம்.பி பிரியங்கா சத்ருவேதி, திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுஷ்மிதா தேவ் மற்றும் சகாரிகா கோஷ் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும், ஜார்கண்ட் முக்தி மோர்சா என்ற கட்சியும், தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளது.