ஜப்பானின் பல பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மியாசாகி கடற்கரையில் இருந்து 20 மைல் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ஜப்பானின் நிலநடுக்க கண்காணிப்பு நிறுவனமான NERV வெளியிட்டுள்ள தகவலில், நிலநடுக்கம் ஹியுகா – நாடா கடலில் பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ரிக்டர் அளவில் 7.1 என்று சக்திவாய்ந்த நிலநடுக்கமாக உணரப்பட்டதால் ஜப்பானின் பல பிராந்தியங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது அந்நாட்டு அரசு. மியாசாகி மாகாணத்தில் உள்ள கடலில் நிலநடுக்கம் காரணமாக சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்ததாக கூறப்படுகின்றன.
இதனையடுத்து மியாசாகி, கொச்சி, ஒய்டா, ககோஷிமா, எஹிம் போன்ற மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது ஜப்பான் அரசு.
இதற்கிடையே, கியூஷு மற்றும் ஷிகோகு ஆகிய தீவுகள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுவதாகவும், அங்கு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றும் ஜப்பான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.