மதுரைக்கு கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 பேர் கைது!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக ஒடிசா மாநிலத்தில் இருந்து மதுரைக்கு கண்டெய்னர் லாரியில் கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக சட்டவிரோதமாக மதுபானங்கள், கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் தமிழகத்திற்குள் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் எஸ்ஐ கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கலுகொண்டப்பள்ளி பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது அந்த வழியே வந்த கன்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த லாரி ஓட்டுனரின் இருக்கைக்குப் பின்னால் மறைத்து வைத்து கஞ்சா கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அதிலிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் லாரியை ஓட்டி வந்த, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்(34) மற்றும் உடன் வந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஜெயக்குமார்(46) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை மதுரைக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், 20 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போலீசார் பின்பு சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News