திருவள்ளூர் அருகே காக்களூரில் ஆவின் பால் பண்ணை செயல்பட்டு வருகிறது. தினமும் சுமார் ஒரு லட்சம் லிட்டர் பால் மற்றும் பால் பொருட்கள் இங்கிருந்து பொதுமக்களுக்காக பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் பால் உற்பத்தியாலையில் பால் தயார் செய்யப்பட்டு வந்தது. அப்போது பணியில் இருந்த உமாராணி என்பவரின் துப்பட்டா மற்றும் தலைமுடி எதிர்பாராத விதமாக கன்வேயர் பெல்ட்டில் சிக்கியதாக கூறப்படுகிறது.
சுதாரித்து எழுவதற்குள் அவரது தலை பெல்ட்டில் சிக்கி துண்டானது. இதையடுத்து ஆவின் நிர்வாகத்தினர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளுவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
6 மாதங்களுக்கு மேலாக அங்கு உமாராணி பணி செய்து வந்த நிலையில் தற்போது விபத்தில் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இனி வருங்காலங்களில் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆவின் பால் பண்ணைகளில் பணி செய்யும் தொழிலாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேம்படுத்த வேண்டும் எனவும், உயிரிழந்த உமா ராணியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை எழுந்துள்ளது.