சென்னையில் ஃபார்முலா 4 இரவு நேர கார் பந்தயத்தை இன்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் இதுவாகும். 3.5 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட சர்க்யூட் தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர்பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் அண்ணா சாலை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ளது.
இது தெற்கு ஆசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் என்பது குறிப்பிடத்தக்கது. தீவுத்திடலில் தொடங்கி மீண்டும் அங்கேயே சென்றடையும் வகையில் பந்தயம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாலை சர்க்யூட்டில் 19 வளைவுகள் அமைந்துள்ளது. இது பந்தய டிரைவர்களுக்கு கடும் சவாலாக இருக்கக்கூடும். தெற்கு ஆசியாவில் முதல் முறையாக சென்னையில் இரவு நேர கார் பந்தயம் நடத்தப்படுவதால் இந்தப் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இன்று (31-ம் தேதி) பிற்பகல் 2.45 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பயிற்சி சுற்றுகள் நடைபெறுகின்றன.
இதை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தகுதிச் சுற்றுகள் இரவு 7.10 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். தகுதி சுற்றின் அடிப்படையிலேயே ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிரதான பந்தயத்தில் டிரைவர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள். இதனால் தகுதி சுற்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
நாளை (செப்டம்பர் 1) பிரதான கார் பந்தயங்கள் 2 போட்டிகளாக நடைபெறுகிறது. பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தின் முதல் போட்டி மாலை 5.05 மணிக்கு தொடங்கும். இது 25 நிமிடம் மற்றும் ஒரு ரவுண்டை கொண்டது. இந்த பந்தயம் 5.35 மணிக்கு நிறைவடையும். பார்முலா 4 கார் இந்தியன் சாம்பியன் ஷிப் பந்தயத்தின் 2-வது போட்டி இரவு 9.05 மணிக்கு தொடங்கும். இதுவும் அதே நிமிடங்களை கொண்டது. இந்த பந்தயம் 9. 30 மணிக்கு நிறைவடையும்.